ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தும்படி கூறியதால் தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தும்படி கூறியதால் பள்ளிகளை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் ஆகிய 2 இடங்களில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செலவுகள் அதிகமாக இருப்பதால் அதை ஈடுகட்ட வகுப்புகளில் கூடுதல் மாணவர் களை சேர்க்கலாம். தற்போது 35 பேர் ஒரு வகுப்பில் உள்ளனர். அதை 50 மாணவர்களாக உயர்த்தினால் பள்ளிக்கு அதிக வருமானம் வரும். ஆனால் மாணவர்கள் மீது தற்போது செலுத்தப்பட்டு வருவது போல தனி கவனம் செலுத்த முடியாது. அதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படும்.
ரூ.2 லட்சம் வைப்பு தொகை
எனவே தற்போது படித்து வரும் அனைத்து மாணவ- மாணவிகளும் வரும் 2019-ம் கல்வி ஆண்டில் ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஏற்கனவே ரூ.20 ஆயிரம் செலுத்தி உள்ளதால் மீதி உள்ள ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை வருகிற 2019 ஏப்ரல் மாதத்தில் அடுத்த ஆண்டு கல்வி கட்டணமாக முதல் தவணையை செலுத்தும்போது சேர்த்து கட்ட வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் புதிதாக சேரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ரூ.2 லட்சம் வைப்்பு தொகை வசூல் செய்யப்படும். வைப்பு தொகை கட்ட இயலாதவர்கள் இந்த கல்வி ஆண்டு இறுதியில் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியேறலாம். இதற்கான முடிவை இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
முற்றுகை போராட்டம்
இதை படித்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி கட்டணம் கட்டி, வாகனத்துக்கும் பணம் கட்டி படிக்க வைத்து கொண்டிருக்கும்போது, தற்போது படிக்கும் மாணவர்களுக்கு வைப்பு தொகை எப்படி கட்ட முடியும்?. புதிதாக சேர்பவர்களுக்கு எவ்வளவு தொகை அறிவித்தாலும் பரவாயில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் சேர்வார்கள். ஆனால் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வைப்பு தொகை கட்டவேண்டும் என்பது அவர்களது கல்வியை கேள்விக்குறியாக்கும் செயல் என கூறி வைப்பு தொகை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள பள்ளிகளை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
இதனால் 2 பள்ளி வளாகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெற்றோர்களின் போராட்டம் குறித்து தமிழக கல்வித்துறைக்கு தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அஞ்சலோன் இருதயராஜ் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மற்றும் போலீசாருடன் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவும் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் கோரிக்கை குறித்து இவர்கள் மற்றும் பெற்றோர்கள் 10 பேர் பள்ளி நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
புகார் மனு
அதன்பிறகு பொதுமக்களை சந்தித்த கல்வித்துறை அதிகாரிகள், “ரூ.2 லட்சம் வைப்பு தொகையை யாரும் செலுத்த வேண்டாம். பெற்றோர்கள் சார்பில் தலா 10 பேர் இது குறித்து கல்வி கட்டண ஒழுங்குமுறை ஆணைய நீதியரசர், தமிழக கல்வித்துறை முதன்மை செயலர், காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு எழுதி கொடுக்கலாம்” என்றனர்.
தமிழக அரசு இந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அஞ்சலோன் இருதயராஜிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாங்கள் ரூ.2 லட்சம் பணம் கட்டத்தயாராக இல்லை என்பதை தெரிவிக்கவே போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் பள்ளி நிர்வாகம், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இ-மெயிலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில், “பெற்றோர்கள் போராட்டம் நடத்துவது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் முன்பு 2 தீர்வுகள்தான் உள்ளன. சட்டரீதியாக ஆலோசித்த பின்பு 2 பள்ளிகளையும் உடனடியாக மூடிவிடுவது அல்லது பள்ளி நிர்வாக உரிமையை வேறு நிறுவனத்துக்கோ, நபருக்கோ மாற்றி விடுவது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த கல்வி ஆண்டு இறுதி வரை பள்ளியை நடத்தி முறையாக பள்ளிகளை மூடி விடுவது என்று முடிவெடுத்து உள்ளோம்” என கூறி உள்ளனர்.
எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை இதில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story