கனிமங்களை கடத்தும் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
கனிமங்களை கடத்தும் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் கனிமங்கள் கடத்தி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் வருவாய்த்துறையினர் கனிமவளத்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கனிமங்களை கடத்தி சென்றதாக இதுவரை 156 வாகனங்கள் மற்றும் 37 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குண்டர் தடுப்பு சட்டத்தில்
மேலும் மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 127 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதோடு அவர்களில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் உரிய அனுமதி இன்றி கனிமங்களை எடுத்து செல்லும் வாகனங்களை கண்காணித்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story