குமாரராஜுப்பேட்டை கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
குமாரராஜுப்பேட்டை கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரராஜுப்பேட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் பள்ளிப்பட்டு- சோளிங்கர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப் படுத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரிடம், குடிநீர் வழங்கும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் அடைபட்டுள்ள குழாயை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story