திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2018 3:18 AM IST (Updated: 21 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஊர்குடி கிராமத்தில் உள்ள பதினெட்டாவது வாய்க்காலை ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உறுதி செய்யும் வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி ரூ.10 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணிகளை கண்காணிக்கவும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்யவும் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என கூறுவது உண்மைக்கு மாறானது. தமிழக அரசு பொறுப்பை தட்டி கழிக்காமல் விவசாயிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் பிரச்சினைக்காக மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காவிரி பிரச்சினைக்காக தமிழக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். அப்போது தமிழக எம்.பி.க்களுக்கு, பிற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் கேட்டு பெற்று வருகிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், பள்ளி கல்வித்துறை இணை செயலாளருமான சரவணவேல்ராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story