வேகத்தடைகளில் முன்எச்சரிக்கை கோடுகள் போட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


வேகத்தடைகளில் முன்எச்சரிக்கை கோடுகள் போட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x

நாகை வடக்குபொய்கை நல்லூரில் குறுகிய சாலை வளைவில் உள்ள வேகத்தடைகளில் முன்எச்சரிக்கை கோடுகள் போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், வேளாங்கண்ணி முச்சந்தி ஆர்ச்சில் இருந்து செல்லும் சாலை வழியாகவும் என இரண்டு வழித்தடத்தில் நாகைக்கு செல்லலாம். முச்சந்தி ஆர்ச்சில் இருந்து செல்லும் சாலை, தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கை நல்லூர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் வழியாக நாகை பழைய பஸ் நிலையத்துக்கு செல்கிறது.

இதில் வடக்கு பொய்கை நல்லூரில் புகழ்மிக்க கோரக்கசித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வேளாங்கண்ணியில் இருந்து சித்தர்கோவிலுக்கு வருபவர்களும் இந்த சாலை வழியாகத்தான் பெரும்பாலும் வருகின்றனர். இந்த வேளாங்கண்ணி - நாகை செல்லும் வழித்தடத்தில் வடக்கு பொய்கை நல்லூர் மன்மதன் கோவில் அருகே குறுகிய சாலை வளைவு உள்ளது.

இந்த வளைவின் இரு புறங்களிலும் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியும் அளவுக்கு முன்னெச்சரிக்கை அடையாள கோடு இல்லை. இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் வாகனங்களில் செல்வோர் வேகத்தடையின் அருகே வந்து பிரேக் போடும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குளாகின்றனர். குறுகிய வளைவு என்பதால் சாலையின் ஓரத்தில் உள்ள வீடுகளிலும் வாகனங்கள் புகுந்து விடுகின்றன.

மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, வடக்குபொய்கை நல்லூர் மன்மதன் கோவில் அருகே குறுகிய வளைவின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் சாலையோடு சாலையாக சிறிய அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. எனவே வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக, முன்எச்சரிக்கை அடையாள கோடுகள் (வெள்ளை நிற கோடு) போடவேண்டும். மேலும் இரவு நேரத்தில் ஒளிரும் ரேடியம் விளக்குகளை வேகத்தடை அருகே பதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Next Story