குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை: என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 3 பேர் கைது


குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை: என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விருத்தாசலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் அமர்ந்து இருந்தனர். அப்போது பஸ்சில் 3 வாலிபர்கள் குடிபோதையில் ஒருவரைப்பற்றி ஒருவர் தரக்குறைவாக பேசியபடியே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது.

கடலூர் முதுநகர் தனியார் அரிசி ஆலை அருகே பஸ் வந்தபோது கண்டக்டர் வீரபிரசாத் குடிபோதையில் இருந்த வாலிபர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், கண்டக்டரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை பணிசெய்ய விடாமல் தடுத்தனர். மேலும் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிரைவர், பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், விருத்தாசலம் தாலுகா நடுத்திட்டை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜதுரை(வயது 23), மேலகுப்பம் கொள்ளிருப்பை சேர்ந்த காசி மகன் விஜயன்(25), பரமசிவம் மகன் சதீஷ்(23)என்பதும், இவர்களில் விஜயன், சதீஷ் ஆகியோர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கண்டக்டர் வீரபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரை, விஜயன், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story