திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷிய பெண் பூரண குணமடைந்தார்: நேரில் பார்த்து நலம் விசாரித்த கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷிய பெண் பூரண குணமடைந்தார்: நேரில் பார்த்து நலம் விசாரித்த கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 July 2018 5:15 AM IST (Updated: 21 July 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷிய பெண் பூரண குணமடைந்து விட்டார் என்று அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் கடந்த 16-ந் தேதி படுகாயம் அடைந்து அலங்கோலமான நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 17-ந் தேதி மாவட்ட நீதிபதி மகிழேந்தி மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து 18-ந் தேதி ரஷிய நாட்டு தூதரக விசா சரி பார்ப்பு அதிகாரி டென்னிஸ் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு வந்து அந்த பெண்ணை பார்வையிட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் சுயநினைவின்றி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுயநினைவிற்கு வந்த ரஷிய பெண்ணிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரஷிய பெண், நடந்த சம்பவம் குறித்து தனது வாக்கு மூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்து உள்ளார்.

அதில் வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாரதியின் அண்ணன் நீலகண்டன் (வயது 35), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகிய 3 பேர் தன்னை மானபங்கம் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக ஆரணி நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி, அந்த பெண்ணிடம் ரகசிய வாக்குமூலத்தை பெற்றார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

பின்னர் வெளியே வந்த கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஷிய பெண் தற்போது பூரண குணமடைந்து உள்ளார். இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதால் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தூதரகத்தில் இருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூரண குணமடைந்து அவர், மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல உள்ளார். அவரை அழைத்து செல்ல தூதரகத்தில் இருந்து சில நபர்கள் வந்து உள்ளனர்.

தொடர்ந்து சட்ட ரீதியான விசாரணை உள்ளதால், அவர் சில நாட்கள் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் அவர் தங்குவதற்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். விசாரணைக்கு பின் அவர் இங்கு தங்குவதும், வெளி இடங்களுக்கு செல்வதும் அவரது விருப்பம். மேலும் அவருக்கு போதை பொருள் வழங்கியது போன்று எந்த தகவலும் இல்லை.

திருவண்ணாமலையில் 290 வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக இதுவரை வேறு எங்கிருந்தும் புகார்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story