வேலூர் பாலாற்று பழைய பாலத்தில் திடீர் விரிசல், அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்


வேலூர் பாலாற்று பழைய பாலத்தில் திடீர் விரிசல், அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 21 July 2018 5:00 AM IST (Updated: 21 July 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்று பழைய பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கிறார்கள்.

வேலூர், 

வேலூர் பாலாற்றில் செல்லியம்மன் கோவில் அருகில் பழைய மேம்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சித்தூர், கடலூர் தேசிய நெடுஞ்சாலை இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து புதிய மேம்பாலத்தின் வழியாக வேலூரில் இருந்து காட்பாடி, சித்தூர், திருப்பதி செல்லும் வாகனங்கள் செல்கின்றன. அதேபோன்று காட்பாடியில் இருந்து வேலூர் வரும் வாகனங்கள் பழைய மேம்பாலத்தின் வழியாக வருகின்றன. பழைய பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக இந்தப் பாலத்தின் வழியாக வந்த வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலம் சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. பல நாட்கள் ஆகியும் பாலாற்றுப் பாலம் சீரமைக்கும் பணியை தொடரவில்லை.

இந்த நிலையில் பாலாற்று பழைய பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் உள்ள சிமெண்டு கான்கிரீட்டுகள் உடைந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பாலத்தின் பாதி அளவுக்கு விரிசல் காணப்படுகிறது.

விரிசல் காரணமாக பாலத்தின் ஒரு ஓரமாக மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியாக சென்று வரும் நிலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு சில நாட்களாகியும் அதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் ஒரே ஒரு இரும்பு தடுப்பை மட்டும் வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story