தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவ–மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 491 மாணவ–மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 11–வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 491 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். முதுநிலை பட்டத்தில் சிறப்பிடம் பெற்ற 2 பேருக்கும், இளங்கல்வியியல் பட்டத்தில் சிறப்பிடம் பெற்ற ஒருவருக்கும் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத 241 மாணவ, மாணவிகளுக்கும், தொலைநிலைக்கல்வி மூலம் படித்த 5 ஆயிரத்து 822 மாணவ, மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.
விழாவில் மக்கள் நீதிமன்ற(லோக் அதாலத்) நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
உலகத்தின் சிறந்த மொழியாக கருதப்படுகின்ற 10 மொழிகளில் தமிழ்மொழி முதலிடம் வகிக்கின்றது என்பது நாம் அறிந்த செய்தி. அத்தகு மொழிக்காக உலகிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் இந்த தமிழ்ப்பல்கலைக்கழகம். இதன் பின்னாலே தான் மேலைநாடுகளில் சீனாவிலும், இந்திய மொழிகள் சிலவற்றிலும் மொழியின் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
தற்கால உலகில் உருப்பெற்றுள்ள மொழியியல், இலக்கணவியல், மானுடவியல் முதலிய துறைகளின் வளர்ச்சிகளில் தமிழ்மொழிக்குள்ள பண்டைய வளர்ச்சி கூறுகளை அடையாளம் கண்டு இணைக்கும் வகையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பணிகள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன.
நமது தமிழ்மொழி எத்துணை வலிமை பெற்றது என்பதனை உலகிற்கு எடுத்து செல்வோர் இல்லை. ஆனால் அவ்வழி தெரிந்தவுடன் அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகள் தங்கள் நலனுக்காக, வாழ்வுக்காக, அறிவு நுணுக்கங்களுக்காக தமிழை நோக்கி தவம் இருக்கின்றனர் என்று சொன்னால் அதுவெறும் புகழ்ச்சி அல்ல.
நாம் வாழ்கின்ற இந்த பூமி உருண்டையானது என்று உலகிற்கு சொன்னவன் தமிழன். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது அவர்கள் பாணியிலேயே இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஆதாரம், அடிப்படை மூலம் எங்கு இருக்கின்றது என்று பார்த்தால் அது தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள தமிழ் வளர் மையம் உலக மக்களுக்கு தமிழை கொண்டு சேர்க்கும் பணியை செயல்படுத்தி வருகிறது. உலக மக்களை ஒருங்கிணைத்து தமிழ் கற்பிக்கும் நோக்கத்தில் முதல் கட்டமாக 16 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ப்பண்பாட்டை உலக நாடுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும், உலக தமிழர்களை ஒன்றிணைப்பதையும் குறிக்கோளாக கொண்டு தமிழ்ப்பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர் மையத்தில் இருந்து ஒளி, ஒலி வழியிலான பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை நடத்தும் விதமாக தமிழ் வளர் அயலக மையங்கள் செயல்பட உள்ளன. செல்போன் மூலமாக தமிழ் கற்பிக்கும் செயலிகளை இந்த மையம் உருவாக்க உள்ளது. தமிழ் வளர் மையத்தின் மூலமாக மின்வாசிப்பு இணையதள உருவாக்கம் தொடங்கப்பட உள்ளது. 1 லட்சத்து 80 ஆயிரம் நூல்களுடன் செயல்படும் தமிழ்ப்பல்கலைக்கழகம், 20 ஆயிரம் அரிய நூல்களை மின்னாக்கம் செய்து உலக மக்களுக்கு இணையம் வழியாக வழங்க உள்ளது.
பள்ளியில் வழங்கப்பட்ட இலவச கல்வியை, பல்கலைக்கழகம் வரை கொண்டு வந்த பெருமையை தமிழ்ப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் பெறுகிறது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் இலக்கியம் பயில சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார், கலெக்டர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் மாணவ–மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.