திருவேங்கடத்தில் கார் மோதி வியாபாரி பலி; 4 பேர் படுகாயம் கம்மங்கூழ் குடித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
திருவேங்கடத்தில் கார் மோதி ஆடு வியாபாரி பலியானார். பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவேங்கடம்,
திருவேங்கடத்தில் கார் மோதி ஆடு வியாபாரி பலியானார். பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தில் கழுகுமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). இவர் திருவேங்கடம் மெயின் பஜாரில் டாஸ்மாக் கடை அருகே தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசியை நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென நிலைதடுமாறி, கம்மங்கூழ் வண்டி மீது மோதிவிட்டு, அங்குள்ள கூத்தாடிக்குளம் கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் பாலசுப்பிரமணியன் மீதும், அங்கு கம்மங்கூழ் குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது. மேலும் கம்மங்கூழ் வைத்திருந்த தள்ளுவண்டியும் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.
ஆடு வியாபாரி பலி
இந்த விபத்தில் திருவேங்கடம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி கணேசன் (62) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் கம்மங்கூழ் வியாபாரி பாலசுப்பிரமணியன், சிப்பிப்பாறையை சேர்ந்த சண்முகவேல் மகன் முத்துக்குட்டி மற்றும் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான வடக்கு பாறைப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் முனீஸ்வரன் (17), செல்லபட்டியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் முகேஷ் (17) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருவேங்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவேங்கடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்களில் முனீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பட்டாசு கடை அதிபர் கைது
கணேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசனுக்கு சொர்ணம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக திருவேங்கடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சிவகாசி ஆறுமுகம்நகரை சேர்ந்த பட்டாசு கடை அதிபரான அற்புதகுமார் (48) என்பவரை கைது செய்தார். இந்த விபத்தில் அற்புதகுமார் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story