நெல்லையில் மீண்டும் சூறைக்காற்று மரம் சாய்ந்து விழுந்து ஆட்டோ சேதம்


நெல்லையில் மீண்டும் சூறைக்காற்று  மரம் சாய்ந்து விழுந்து ஆட்டோ சேதம்
x
தினத்தந்தி 21 July 2018 10:00 PM GMT (Updated: 21 July 2018 6:27 PM GMT)

நெல்லையில் மீண்டும் நேற்று சூறைக்காற்று வீசியது. இதில் மரம் சாய்ந்து விழுந்து ஆட்டோ சேதம் அடைந்தது.

நெல்லை, 

நெல்லையில் மீண்டும் நேற்று சூறைக்காற்று வீசியது. இதில் மரம் சாய்ந்து விழுந்து ஆட்டோ சேதம் அடைந்தது.

மீண்டும் சூறைக்காற்று

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடந்த 15–ந் தேதி திடீரென்று சூறைக்காற்று வீசியது. இதில் மரங்கள் சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன. ஏராளமான மின்கம்பங்களும் சேதம் அடைந்தன. கடையம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் பலியானான்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் நெல்லையில் சூறைக்காற்று வீசியது. ரோட்டில் செல்வோர் மீது புழுதிவாரி தூற்றியது. நெல்லையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்பு வேலிகள் ஆகியவை சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன.

ஆட்டோ சேதம்

இதற்கிடையே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் மேம்பாலத்தையொட்டி நின்றிருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீதும், அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் மீதும் விழுந்தது. இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் மக்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஒருசில இடங்களில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சூறைக்காற்றால் சாய்ந்தன.


Next Story