காட்டுயானை அட்டகாசம்: வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


காட்டுயானை அட்டகாசம்: வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சாந்தாம்பாறை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சாந்தாம்பாறை,

போடிமெட்டை அடுத்துள்ள பூப்பாறை, கோரம்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த யானை கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை சாந்தாம்பாறை வனத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வனத்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற மக்கள் சாந்தாம்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் அந்த யானை பகல் நேரத்தில் நிற்கிறது. இதனால் பயந்துகொண்டு தொழிலாளர்கள், தோட்டங்களுக்கு வேலைக்கு வருவதில்லை. மேலும் எங்கள் பகுதி மாணவர்களும் அந்த ஒற்றை யானைக்கு பயந்து சரியாக பள்ளிக்கூடங்களுக்கு செல்வதில்லை, என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story