தேனி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 என்ஜினீயர்கள் கைது


தேனி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 என்ஜினீயர்கள் கைது
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

தேனி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி,

போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தன. திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தனிப்படை போலீசார், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஸ்வரன் (வயது 25), அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த முனிவேல் மகன் சக்திகுமார் (26), அன்னஞ்சி பிள்ளையார் கோவில் அருகில் வசிக்கும் கோவிந்தராஜ் மகன் சூரியநாராயணன் (24) ஆகிய 3 பேரை பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் வசிக்கும் தேசியமயமாக் கப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் பொன்ராஜன் வீட்டிலும், தேனி கோட்டைக் களத்தை சேர்ந்த ஆசிரியர் சேவியர் பீட்டர் பால்ராஜ் வீட்டிலும், பழனிசெட்டிபட்டியில் கல்வி அதிகாரி ராஜமுருகன் என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருட்டு வழக்கில் விக்னேஸ்வரன், சக்திகுமார், சூரியநாராயணன் ஆகிய 3 பேரையும் தேனி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு மடிக்கணினி, ஒரு ஒயின் பாட்டில் மற்றும் வீடுகளில் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 3 பேரும் என்ஜினீயர்கள். இவர்கள் படித்து முடித்து விட்டு தனியார் நிறுவனங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இதில், விக்னேஸ்வரன், சக்திகுமார் ஆகியோர் மீது ஏற்கனவே கோவையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு உள்ளது. தற்போது 3 பேரும் கூட்டணி சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியது தெரியவந்துள்ளது’ என்றார்.

என்ஜினீயர்கள் திருடர்களாக மாறியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

தேனி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதான என்ஜினீயர்கள் 3 பேரும் திருடர்களாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருட்டு வழக்கில் கைதான விக்னேஸ்வரன், சக்திகுமார், சூரியநாராயணன் ஆகிய 3 பேரும் என்ஜினீயர்கள் ஆவார்கள். இவர்கள் திருடர் களாக மாறியது எப்படி? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கைதான 3 பேரும் தனியார் நிறுவனங்களில் தற்காலிகமாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால், அதில் போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதில் சக்திகுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஸ்வரனும், சூரியநாராயணனும் நண்பர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து பொள்ளாச்சியில் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது சிறையில் அவர்களுக்கும், சக்திகுமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. மூன்று பேருமே தேனி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த அறிமுகத்தில் நண்பர்களாகி கொண்டனர். இதற்கிடையே சிறையில் இருந்து வெளியே வந்த சக்திகுமார் பழனிசெட்டிபட்டியில் ஒரு காரை திருடி அதை பெங்களூருக்கு கொண்டு சென்று விற்றுள்ளார். இந்த வழக்கில் அவரை பழனிசெட்டிபட்டி போலீசார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே கோவை சிறையில் இருந்து விக்னேஸ்வரனும், சூரியநாராயணனும் வெளியே வந்தனர். மீண்டும் இவர்கள் சந்தித்து நட்பை புதுப்பித்துக் கொண்ட நிலையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர். பகலில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவது, இரவில் விளக்குகள் எரியாத வீடுகளை நோட்டமிடுவது என தீவிரமாக கண்காணித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். திருடிவிட்டு வெளியூர் தப்பிச் செல்வது கிடையாது. இரவில் திருடிவிட்டு பகலில் வீட்டில் தூங்கியுள்ளனர். இதற்கு ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story