6 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்: ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது


6 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்: ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது
x
தினத்தந்தி 22 July 2018 4:45 AM IST (Updated: 22 July 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

6 ஆண்டுகளாக மர்மம் நீடித்து வரும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு, 3-வது கட்டமாக சி.பி.ஐ. விசாரணையை தொடங்கி உள்ளதால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

திருச்சி,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் திருச்சி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை கடத்தி சென்று கை, கால்களை கட்டி தாக்கி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொலை செய்து, உடலை திருவளர்சோலை பகுதியில் வீசிச்சென்றது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தியும் கொலையாளிகள் யார்?, ராமஜெயம் எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான எந்தவித தடயமும் சிக்கவில்லை. இந்தநிலையில் கொலையுண்ட ராமஜெயத்தின் மனைவி லதா, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறோம். எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கூறி இருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதிக்குள் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை விரைவுப்படுத்தினர். பல்வேறு கோணங்களில் விசாரித்தும், குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பல முறை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அவகாசம் வழங்கியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. பின்னர் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், ராமஜெயம் கொலை தொடர்பான முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். அவர் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் திரட்டப்பட்ட ஆவணங்களை கொண்டு கடந்த மார்ச் மாதம் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தினர். ஆனால், சி.பி.ஐ. போலீசார் விசாரணை தொடர்பான ரகசியங்களை வெளியில் கசிய விடவில்லை. எனவே, கொலை வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டதா? என்றும், கொலையாளிகள் அடையாளம் தெரிந்து விட்டதா? என்றும், கொலைக்கான காரணம் என்ன? என்றும் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே திருச்சியில் சி.பி.ஐ. போலீசார் 3-ம் கட்டமாக விசாரணையை தொடங்கினர். இதனால், ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, ஆய்வு செய்த இடங்களிலேயே மீண்டும் பார்வையிட்டனர். மேலும் அவரது வீடு அமைந்துள்ள இடம், வெளியில் நடைபயிற்சி செல்லும் இடம், யாருடன் எல்லாம் ராமஜெயம் அதிக தொடர்பில் இருந்தார் என்பன போன்றவை விசாரிக்கப்பட்டு உள்ளது. ராமஜெயம் கொலையுண்டு 6 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் யார் என்றே தெரியாமல் இருப்பதால் இந்த வழக்கில் மர்மம் நீடித்தவாறே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story