குப்பை எரியூட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்
விழுப்புரத்தில் குப்பை எரியூட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்து விவசாய பயன்பாட்டிற்கு அனுப்பவும், மக்காத குப்பைகளை தீ வைத்து எரிக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரி எதிரே வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை எரியூட்டு மையம் அமைக்க நகராட்சி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த இடத்தை எரியூட்டு மைய கட்டிடம் கட்டுவதற்கு தயார் செய்யும் வகையில் நேற்று மாலை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் குப்பை எரியூட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசாரும் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மக்கள் இங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கு குப்பை எரியூட்டு மையம் அமைக்கக்கூடாது என்று முறையிட்டனர்.
இதையடுத்து அந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து பாதியிலேயே திரும்பிச்சென்றனர். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.