லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மாவட்டம் முழுவதும் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்பு


லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மாவட்டம் முழுவதும் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 4:00 AM IST (Updated: 22 July 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதை கைவிட்டு, 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். லாரிகளுக்கான காப்பீட்டு தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 3 ஆயிரத்து 500 லாரிகள் உள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக, திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள லாரி செட் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரிகளும் அந்தந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள், லாரிகளை நிறுத்தி வைத்துள்ள இடத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த மார்க்கெட்டில் இருந்து சுமார் 70 சதவீதம் காய்கறிகள் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் டிரைவர்கள், உதவியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story