கயத்தாறில் மாணவன் மர்மச்சாவு: வகுப்பறையில் நடந்த மோதல் காட்சி, ‘வாட்ஸ்–அப்’பில் பரவியதால் பரபரப்பு


கயத்தாறில் மாணவன் மர்மச்சாவு: வகுப்பறையில் நடந்த மோதல் காட்சி, ‘வாட்ஸ்–அப்’பில் பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் மர்மமான முறையில் இறந்த மாணவன், பள்ளி வகுப்பறையில் மற்றொரு மாணவனை தாக்கிய காட்சி ‘வாட்ஸ்–அப்’பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கயத்தாறு, 

கயத்தாறில் மர்மமான முறையில் இறந்த மாணவன், பள்ளி வகுப்பறையில் மற்றொரு மாணவனை தாக்கிய காட்சி ‘வாட்ஸ்–அப்’பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவன் மர்மச்சாவு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடையைச் சேர்ந்தவர் பீட்டர். விவசாயி. இவருடைய மகன் உடையார் (வயது 16). இவன் கயத்தாறில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த 16–ந்தேதி மாலையில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தான். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், உடையார் சக மாணவனை தூக்கி தரையில் போட்டார். இதில் மயக்கம் அடைந்த அந்த மாணவனை கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மாணவன் வீடு திரும்பினான். இதற்கிடையே உடையாரை ஆசிரியர்கள் கண்டித்ததாலும், தன்னால் தாக்கப்பட்ட மாணவன் இறந்து விட்டால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சியதாலும், உடையார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவன் உடையாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவனது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், உடையாரின் உடலை வாங்கி சென்று உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தினர்.

‘வாட்ஸ்–அப்’பில் பரவிய காட்சி

இதற்கிடையே மாணவன் உடையார் இறந்த தினத்தில், பள்ளிக்கூட வகுப்பறையில் மதியம் 12.30 மணிக்கு மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி தற்போது வாட்ஸ்–அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் ஆசிரியர், மாணவிகள் வெளியே சென்ற பின்னர், ஒரு சில மாணவர்கள் தங்களது டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு வெளியே புறப்படுகின்றனர். அப்போது மாணவன் உடையார் தலைமுடியை வாருவதற்காக ஒரு மாணவனிடம் சீப்பு கேட்கிறான். அப்போது மற்றொரு மாணவனும் தனக்கு சீப்பு தருமாறு அந்த மாணவனிடம் கேட்கிறான். உடையார் அந்த மாணவனிடம் சீப்பு வாங்கி தலைமுடியை வாரியபோது, தனக்கு சீப்பு கிடைக்காததால் மற்றொரு மாணவன் உடையாரை திட்டுகிறான். இதில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படுகிறது. அப்போது அந்த மாணவன் பெஞ்சின் மீது ஏறி நின்று, உடையாரை தாக்க முயற்சிக்கிறான். ஆனால் உடையார் அந்த மாணவனை தனது தலைக்கு மேலே தூக்கி, தரையில் போடுகிறான். இதில் மயக்கம் அடைந்த அந்த மாணவனை சக மாணவர்கள் வெளியில் தூக்கி செல்வது பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.


Next Story