பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே பரபரப்பு: விசாரணைக்கு பயந்து தீக்குளித்து பெண் தற்கொலை


பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே பரபரப்பு: விசாரணைக்கு பயந்து தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2018 5:15 AM IST (Updated: 22 July 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே விசாரணைக்கு பயந்து தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வகுமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் செல்வகுமாரின் தாய் முத்துவல்லி, அண்ணி ஜீவிதா ஆகியோர் அருள்தாஸ் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த தமிழ்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், முத்துவல்லி இப்பிரச்சினை தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் திருமணம் ஆகாத எனது மகன் செல்வகுமாருக்கும், தமிழ்செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், எனவே தமிழ்செல்வியிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர்.

அதன்படி, நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு செல்வகுமார் குடும்பத்துடன் வந்தார். அதே போல் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகள், மாமியாருடன் வந்திருந்தார். 2 குடும்பத்தினரும் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்செல்வி, இயற்கை உபாதைக்காக சென்று வருவதாக அவரது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சிறிதுநேரத்தில் பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து தமிழ்செல்வியின் அலறல் சத்தம் கேட்டது. இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பதறியடித்து ஓடி சென்று பார்த்தனர். அங்கு தமிழ்செல்வி உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தமிழ்செல்வி மீது எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி, போலீஸ் நிலையம் அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வியின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? அவருக்கு மண்எண்ணெய் கேன் எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்த இடத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story