பணி இடமாறுதலால் விரக்தி: அணிவகுப்பு ஒத்திகையின்போது பெண் போலீஸ் திடீர் மயக்கம்


பணி இடமாறுதலால் விரக்தி: அணிவகுப்பு ஒத்திகையின்போது பெண் போலீஸ் திடீர் மயக்கம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

பணி இடமாறுதல் வழங் கப்பட்டதால் விரக்தியடைந்த பெண் போலீஸ், திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் என்பவரின் மகள் சுலோச்சனா தேவி (வயது 27). இவர் திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆயுதப்படையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட போலீசாரை, மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங் களுக்கு பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார்.

அதன்படி, சுலோச்சனா தேவிக்கு கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் கொடைக்கானலுக்கு செல்ல விரும்பவில்லை என்றும், பழனிக்கு இடமாறுதல் வழங்கும்படியும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுலோச்சனா தேவி கடந்த 4 நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று காலையில், ஆயுதப்படை மைதானத்தில் வழக்கம் போல போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. ஆனால் சுலோச்சனா தேவி தாமதமாக வந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் வந்த சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீஸ் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story