மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்


மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 22 July 2018 4:00 AM IST (Updated: 22 July 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்களை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உழைக்கும் மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 120 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்களையும், 76 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கி பேசுகையில், தமிழக அரசு பெண்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பெண்களின் நலன் காக்கும் அரசாக மகளிர்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டிற்கு ஊரக பகுதிகள் 967 மற்றும் நகர்ப்புற பகுதிகள் 121 ஆக மொத்தம் 1,088 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், இறுதியாக 120 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டித்தத்தூர் கிராமத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட 76 குடும்பத்தை சார்ந்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.36 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். மேலும் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-ம் ஆண்டில் தொடங்குவதை முன்னிட்டு, பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அரியலூர் மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றவர்கள் வருகிற 23-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறவுள்ளார்கள்.

மேலும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதியோர் சிகிச்சைக்கான மருத்துவ பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவியினையும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

விழாவில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, திட்ட இயக்குனர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) லலிதா, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) இளங்கோ, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் (பொறுப்பு) ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) சரவணபாண்டியன் நன்றி கூறினார். 

Next Story