கைகளை கட்டி கழுத்தை நெரித்து 2 குழந்தைகளை கொல்ல முயன்ற தாய் தூக்குப்போட்டு தற்கொலை கோவில்பட்டி அருகே பரபரப்பு


கைகளை கட்டி கழுத்தை நெரித்து 2 குழந்தைகளை கொல்ல முயன்ற தாய் தூக்குப்போட்டு தற்கொலை கோவில்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2018 3:00 AM IST (Updated: 22 July 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே 2 குழந்தைகளின் கைகளை கட்டி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே 2 குழந்தைகளின் கைகளை கட்டி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த பிரியங்காவை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்ஸ்னவி (1½) என்ற பெண் குழந்தையும், கீச்சுதன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு முத்துகுமார் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் சாலையம் தெரு மேல காலனியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலையில் முத்துகுமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மதியம் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, மீண்டும் வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் முத்துகுமார் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. வீட்டில் அதிக சத்தத்தில் டி.வி. இயங்கி கொண்டிருந்தது.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், முத்துகுமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் பிரியங்கா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரது 2 குழந்தைகளின் கைகளிலும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும், அவர்களின் வாயில் துணியை திணித்து வைத்த நிலையிலும் தரையில் மயங்கி கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துகுமார் கதறி அழுதார்.

குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

உடனே பிரியங்கா மற்றும் அவருடைய 2 குழந்தைளையும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிய ஜெய்ஸ்னவி, கீச்சுதன் ஆகிய 2 குழந்தைகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப தகராறு காரணமாக பிரியங்கா தன்னுடைய குழந்தைகளின் கழுத்தை நெரித்து விட்டு, அவர்கள் இறந்ததாக கருதி, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். திருமணமான 3 ஆண்டுகளில் பிரியங்கா தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story