கோவையில் இருந்து ரெயிலில் சரக்குகளை அனுப்புவது 10 சதவீதம் அதிகரிப்பு


கோவையில் இருந்து ரெயிலில் சரக்குகளை அனுப்புவது 10 சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் இருந்து ரெயிலில் சரக்குகளை அனுப்புவது 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கோவை,

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் நேற்று ஓடவில்லை. அந்த லாரிகள் உக்கடம் லாரி பேட்டை மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கேரளா செல்லும் லாரிகள் வாளையாறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் உள்ள எல் அண்டு டி பைபாஸ் சாலையோரமும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெளியூர் லாரி டிரைவர்கள் லாரிகளில் தங்கியிருந்தபடி ஸ்டவ் வைத்து சமைத்து சாப்பிட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:– லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதன் காரணமாக அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலைநிறுத்தத்தை சமாளிக்க அரசு பஸ்கள் மூலம் சிறிய அளவிலான சரக்குகளை அனுப்பவும், இருக்கைகளை அகற்றி விட்டு அதிக அளவில் சரக்குகளை அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் ரெயில்கள் மூலம் அதிக அளவில் சரக்குகளை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவை ரெயில் நிலையத்திலிருந்து தினமும் 90 டன் சரக்குகள் ரெயில் மூலம் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால் ரெயில்கள் மூலம் சரக்குகள் அனுப்புவது 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் நேற்று நள்ளிரவு கோவை வந்தது. அதில் ஒரு வேகனில் 18 டன் காய்கறிகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் காய்கறிகள் விலை உயருமா? என்பதற்கு காய்கறி மற்றும் பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:–

வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கோவைக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கேரளாவுக்கு தினமும் மாலையில் லாரிகளில் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் தற்போது லாரிகள் ஓடாததால் கேரளாவுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது.

காய்கறிகள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் அவை 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகள் வராததால் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால் உள்ளூரில் விளையும் காய்கறிகளான தக்காளி, கத்திரி போன்றவை சிறிய டெம்போ வேன்கள், ஆட்டோ மூலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் என்பதால் அவற்றின் விலை அதிகமாக உயராது. ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயரும். இதேபோல் பழங்களின் விலையும் உடனடியாக உயராது. சில நாட்களுக்கு தேவையான பழங்கள் இருப்பு உள்ளன. அவை தீர்ந்த பின்னர் தான் அவற்றின் விலையும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, லாரிகள் மூலமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.160–க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி தற்போது ரூ.180–க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story