பொள்ளாச்சியில் 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம், ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


பொள்ளாச்சியில் 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம், ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 4:00 AM IST (Updated: 22 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதன் காரணமாக 2 நாட்களில் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்வு காண வலியுறுத்தி 20–ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்கள் பொள்ளாச்சி பகுதியில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேரடியாகவும், மறைமுகமாகவும், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து முடங்கியதால் அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெபதாஸ், செயலாளர் சேனாதிபதி ஆகியோர் கூறியதாவது:–

பொள்ளாச்சி தாலுகாவில் 2 ஆயிரத்து 500 லாரிகள், 900 சரக்கு வேன்கள், 1,000 மினிடோர் வேன்கள் உள்ளன. பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தென்னை நார், கொப்பரை, காய்கறிகள், மெத்தைகள், தரைவிரிப்பான், கறிக்கோழிகள், கட்டுமான பொருட்கள் என பல பொருட்கள் தமிழகம், கேரளா உள்பட பல இடங்களுக்கு தினமும் எடுத்து செல்லப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் தினமும் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் ரூ.100 கோடி அளவுக்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க முன் வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. வால்பாறையில் தேயிலை இலை பறிக்கும் பணிக்கு போதிய பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொழுந்து தேயிலை இலைகள் இருந்தும் இலை பறிப்பதற்கு போதிய பணியாளர்கள் இல்லை. பல்வேறு எஸ்டேட் நிர்வாகங்கள் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலமாக பச்சை தேயிலையை வாங்கி தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார்கள். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் வால்பாறை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை கோவை, குன்னூர், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏல மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு தேவையான உரங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி, டீசல், விறகுகள் போன்ற பொருட்கள் கொண்டு வருவது பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் வால்பாறை பகுதி பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, கிணத்துக்கடவு, பழனி, திண்டுக்கல், ஊட்டி, கொச்சி போன்ற பகுதிகளில் இருந்துதான் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே சமவெளிப்பகுதியை விட அனைத்து பொருட்களும் வால்பாறை பகுதியில் கூடுதல் விலைக்குத்தான் விற்கப்படுகிறது. இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்ட், மணல், ஜல்லி, கம்பிகள் போன்ற பொருட்களை சமவெளி பகுதியில் இருந்துதான் கொண்டுவர வேண்டும். லாரிகள் வேலை நிறுத்தத்தால் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு மற்றும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.


Next Story