திருட்டு நகைகளை வாங்கியதாக பிரபல நகைக்கடை மேலாளர் உள்பட 2 பேர் கைது


திருட்டு நகைகளை வாங்கியதாக பிரபல நகைக்கடை மேலாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2018 11:15 PM GMT (Updated: 21 July 2018 7:52 PM GMT)

திருட்டு நகைகளை வாங்கியதாக பிரபல நகைக்கடை மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் தேவகுமாரி(வயது 50). இவர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருகிறார். இவர், கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் இரவில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், தேவகுமாரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது முகாமை சேர்ந்த பொதுமக்கள், தேவகுமாரியிடம் நகைகளை பறித்த சிவகுரு, விக்னேஷ் வரன் ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து துவாக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ராஜன் என்கிற கெட்டியான்பாண்டி(30) மட்டும் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி சென்றார். திருச்சி என்.ஐ.டி. அருகே மறைந்திருந்த அவரை துவாக்குடி போலீசார் பிடித்தனர்.

அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கெட்டியான்பாண்டி, அவருடைய மனைவி ரூபா என்கிற அனு ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கெட்டியான்பாண்டி கடந்த 2004-ம் ஆண்டு முதல் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தார். இதுதொடர்பாக, அவர் மீது நாமக்கல் பகுதியில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பதும், அதில் அவர் சிறைக்கு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் பொதுமக்களிடம் வழிப்பறி மற்றும் வீடு வாடகைக்கு கேட்பதுபோல் சென்று நோட்டமிட்டு இரவு நேரங்களில் மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

அந்த வகையில் திருச்சி மற்றும் நாமக்கல்லில் 100 பவுனுக்கும் மேல் நகைகளை கொள்ளையடித்ததும், அந்த நகைகளை மனைவியிடம் கொடுத்து அனுப்பி நாமக்கல்லில் உள்ள அட்டிகா என்ற நகைக்கடையில் நகைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கெட்டியான்பாண்டி மற்றும் அவருடைய மனைவி அனு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அனுவிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை மேலாளரும், நகை மதிப்பீட்டாளருமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த முருகேசன்(28), விற்பனை பிரதிநிதி சேலம் மாவட்டம் மேட்டூர் செட்டிகாட்டுப்பட்டியை சேர்ந்த சக்திவேல்(30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக நகைக்கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு(50) மற்றும் தமிழக பிரதிநிதி ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருவதாக தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நகைக்கடை நிர்வாகத்தின் சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story