ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் ரூ.23 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி மோசடி, 5 பேர் மீது வழக்குப்பதிவு


ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் ரூ.23 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி மோசடி, 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் ரூ.23 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரது மனைவி சங்கரேஸ்வரி. மகன் தீபன் பாரதி, மகள் நிர்மலாதேவி. சங்கரேஸ்வரி விருதுநகர் அருகே உள்ள மத்திய அரசின் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியின் விருதுநகர் கிளையில் ரூ.23 லட்சம் வீட்டுக்கடன் வழங்கக்கோரி கடந்த 2016–ம் ஆண்டு விண்ணப்பித்தார். இதற்கு சங்கரேஸ்வரியின் மகன் தீபன் பாரதி தனது நண்பரான சிவகாசியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பத்திரத்தை ஜாமீனாக கொடுத்துள்ளார்.

அப்போது தனது மற்றொரு நண்பரான மல்லியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை வங்கி மேலாளரிடம் ராஜதுரை என்று ஆள் மாறாட்டம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய வங்கியும் ரூ.23 லட்சம் வீட்டுக்கடன் வழங்கியுள்ளது. ஆனால் முறையாக கடன் தவணை செலுத்தாததால் சங்கரேஸ்வரி குடும்பத்தினருக்கும், சொத்து ஜாமீன் கொடுத்துள்ள ராஜதுரைக்கும் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

வங்கி நோட்டீசை கண்ட ராஜதுரை அதிர்ச்சி அடைந்து தான் யாருக்கும் சொத்து ஜாமீன் வழங்கவில்லை என வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார். இது பற்றி வங்கி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதில் ஆள் மாறாட்டம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வங்கி மேலாளர் அசோக்குமார், விருதுநகர் மேற்கு போலீசில் வங்கி நிர்வாகத்தை ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்து விட்டதாக புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சங்கரேஸ்வரி, அவரது கணவர் பாண்டித்துரை, மகன் தீபன் பாரதி, மகள் நிர்மலாதேவி, மற்றும் தீபன் பாரதியின் நண்பர் இசக்கிமுத்து ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story