மயிலாடுதுறை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி


மயிலாடுதுறை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே நடந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வந்தபோது நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த தேவநாதன். இவருடைய மகன் கரிகாலன் (வயது 20). கும்பகோணம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ்(20). திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மாடாகுடி புதுகாலனி தெருவை சேர்ந்த பழனி மகன் தினேஷ்(20). இவர்கள் 3 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தனர்.

இவர்களது நண்பரான முத்துப்பாண்டிக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், பிறந்த நாளை கொண்டாட நாகை மாவட்டம் பூம்புகார் கடற்கரைக்கு செல்ல இவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கரிகாலன், விக்னேஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், முத்துப்பாண்டியும், அவரது நண்பரான மற்றொரு விக்னேஷ் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும் நேற்று கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு பூம்புகார் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் குளித்து விட்டு பிறந்த நாள் விழாவை கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

பூம்புகாரை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று மதியம் பூம்புகாரில் இருந்து 5 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் கும்பகோணத்துக்கு புறப்பட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த டேங்கர் லாரி, கரிகாலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கரிகாலன், விக்னேஷ் ஆகிய இருவரும் டேங்கர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ் மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கரிகாலன், விக்னேஷ் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த தினேஷ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தீத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அனந்தராமனை(40) கைது செய்தனர். 

Next Story