திரு.வி.க. நகரில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 வாலிபர்கள் கைது 250 மதுபாட்டில்கள் பறிமுதல்
திரு.வி.க. நகரில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திரு.வி.க.நகர்,
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் புளியந்தோப்பு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிபா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஒரு கடை அருகே 2 வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த 20 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல்(வயது 24), ராஜாதோட்டம் 3-வது தெருவை சேர்ந்த சூர்யா(21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அதே பகுதி கே.எம்.கார்டனை சேர்ந்த துரை என்பவரின் மனைவி கன்னியம்மாள் (49) என்பவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்க முயன்றதும் தெரியவந்தது.
மதுபாட்டில்கள் பறிமுதல்
மேலும், விசாரணையில் அவர்கள் இருவரும் கன்னியம்மாள் பணம் கொடுத்ததன் பேரில் நேற்று காலை பல்வேறு டாஸ்மாக் கடைகளில் இருந்து சுமார் 250 பாட்டில்கள் வாங்கி சென்று கன்னியம்மாளிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த 20 மதுபாட்டில்களை திறந்து அதில் அதிக போதை தரக்கூடிய போதை வஸ்துகளை கலந்து, அந்த மதுபாட்டில்களை விற்க முயன்றதாகவும் தெரியவந்தது.
பிடிபட்ட 2 பேர் கொடுத்த தகவலின்படி கன்னியம்மாள் வீட்டில் புளியந்தோப்பு போலீசார் சோதனை செய்தனர். அங்கு இருந்த 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கன்னியம்மாள் மற்றும் ராகுலின் மாமா ரூபன்(35) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 பேர் கைது
தப்பி ஓடிய கன்னியம்மாள் கடந்த 6-ந்தேதி திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்றதாக புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் மதுபாட்டில்களை வாங்கி வாலிபர்கள் மூலம் விற்க முயன்றது தெரியவந்தது. ராகுல் மற்றும் சூர்யாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story