இப்படியும் ஒரு கல்விச்சாதனை
கிராமத்தின் முதல் பட்டதாரி, முதல் டாக்டர், முதல் என்ஜினீயர் என்ற சிறப்பை பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
குகுமணி துடு என்ற மாணவியோ முதன் முதலாக தன் கிராமத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஏற்கனவே இவர் 2016-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியதும் சாதனையாகவே கருதப்பட்டது. அப்போது அவருடன் 3 பேர் தேர்வு எழுதி இருந்தார்கள். ஆனால் அவர்கள் படிப்பை தொடரவில்லை. ஆனால் குகுமணியோ, படித்தே தீருவேன் என்ற வைராக்கியத்துடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் படிப்பை தொடர்ந்து, கிராமத்திற்கு பெருமையும் சேர்த்திருக்கிறார்.
150 ஆண்டு காலமாக இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயர் நிலை கல்வி பயிலவில்லை என்ற நிலையை மாற்றி இருக்கிறார். குகுமணி மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்திலுள்ள மெடேல்டங்கா கிராமத்தை சேர்ந்தவர்.
‘‘நான் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். மற்றவர்களைபோல் படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பட்டப்படிப்பை முடித்துவிட்டு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இருப்பினும் என் குடும்பத்தினரால் என்னை தொடர்ந்து படிக்க வைக்க பணம் செலவு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை’’ என்கிறார், குகுமணி.
இவருடன் 10-ம் வகுப்பு வரை படித்த மாணவி ஒருவர் படிப்பை தொடராமல் திருமணம் செய்து விட்டார். மற்ற மாணவர்கள் இரண்டு பேர் குடும்ப சூழ்நிலையால் வேலை தேடி வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். குகுமணி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்.
இவருடைய பெற்றோர் விவசாய வேலை செய்கிறார்கள். இவருடைய சகோதரர் பிந்து துடு குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். ‘‘என் சகோதரியின் கல்வி செலவுகளை சமாளிப்பதற்கு கூடுதலாக உழைப்போம். அவருடைய படிப்பு எங்களால் தடைபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்’’ என்கிறார், பிந்து.
குகுமணியின் குடும்ப பின்னணியை அறிந்த அரசு அதிகாரி ஒருவர் அவரை படிக்க வைப்பதற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
2001-ம் ஆண்டு வரை இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. அந்த கிராமத்தை சேர்ந்த பாபுலால் துடு என்பவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனது நிலத்தை தானமாக வழங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தொண்டு நிறுவனத்தின் முயற்சியினால் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, இயங்கிக் கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story