உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 22 July 2018 2:19 PM IST (Updated: 22 July 2018 2:19 PM IST)
t-max-icont-min-icon

அவள் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவனை காதலித்தாள்.

இறுதி ஆண்டில் தங்கள் காதலை உறுதி செய்துவிட்டு, ஏதாவது வேலை தேடிக்கொண்டு, இரு வீட்டிலும் காதலை வெளிப்படுத்தி, கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதனால் நெருக்கமாக பழகினார்கள். அவர்கள் காதல் கல்லூரியில் பலருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் காலப்போக்கில் அவன், அவளிடமிருந்து மெல்ல மெல்ல விலகினான். பேச்சு, சந்திப்பை குறைத்தான். கல்லூரி படிப்பு முடிந்து, பிரியும் தருவாயில், ‘இனி என்னை மறந்துவிடு’ என்று, காரணம் எதுவும் கூறாமல் கடிதம் எழுதிவைத்துவிட்டு, அவளை சந்திக்காமலே சென்றுவிட்டான். அதன் பிறகு அவளால் அவனை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அவள் வீட்டிலே இருந்தாள். இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அவளை பெண் கேட்டு ஒரு குடும்பம் வந்தது. வரன் யார் என்று விசாரித்தபோது அவன், அவள் படித்த கல்லூரி யில் அதே காலகட்டத்தில் படித்த சீனியர் மாணவன் என்பது புரிந்தது. அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று அவள் கூறிவிட்டாள்.

அன்றிலிருந்து அவன், அவளுக்கு எதிரியாகிவிட்டான். அவளது பழைய கல்லூரிக் காதலை அவன் அறிந்துவைத்திருந்ததால், ‘கல்லூரி யில் படிக்கும்போதே அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவன் மூலம் கர்ப்பமாகி, அவள் கருவை கலைத்தது தனக்கு தெரியும்’ என்று, அவளது ஊருக்குள் வசிக்கும் பலரிடம் வதந்தியை பரப்பினான். யாராவது அவளை பெண் பார்த்துவிட்டு சென்றால், அவரது வீட்டில் போய் தப்புத்தப்பாக அவளை பற்றி கூறி, அவளுக்கு திருமணமே நடைபெறாத அளவுக்கு செய்துவி ட்டான்.

ஏழெட்டு வருடங்களாக எத்தனை யோ விதமான முயற்சிகள் எடுத்தும், அவளுக்கு திருமணம் நடக்காத தால், ெபற்றோர் மிகுந்த மனச்சோர்வு அடைந்தனர். அதோடு மகள் மீது ‘அபார்ஷன்’ அபாண்டம் சுமத்தப் பட்டது அவர்களுக்கு தலைகுனி வையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தனியார் நிறு வனத்தில் பணிபுரியும் மனைவியை இழந்த ஒருவருக்கு, ரொம்ப சிரமப்பட்டு அவளை பேசி முடித்தார்கள். அவருக்கு ஐந்து வயதில் மகளும் இருக்கிறாள். இரண்டாம் திருமணம் என்பதால் இவள் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை. அதோடு அவர், இவளை விட 15 வயது பெரியவராகவும் இருந்தார். ஆனால் பெற்றோர் அவளை நிர்பந்தப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

இந்த திருமணத்தையும் பிரச்சி னைக்குரிய அந்த நபர் தடுத்து விடக்கூடாது என்று கருதி இவளை, இரண்டாம் தாரமாக்குகிறவர் வசிக்கும் பகுதிக்கே அழைத்துச் சென்று அங்கே ஒரு கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்தார்கள்.

ஆசையோடு மணவாழ்க்கைக் குள் அடியெடுத்து வைத்தவளுக்கு முதலிரவன்றே அதிர்ச்சி காத்திருந் தது. புதுமாப்பிள்ளை, ‘நான் பிறவியிலே இனப்பெருக்க உறுப்பு குறைபாட்டுடன் பிறந்தவன். எனக்கு மணவாழ்க்கைக்குரிய தகுதி கிடையாது. அதனால் நான் திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்தேன். ஆனால் எனக்கும் பெண் துணை வேண்டும் என்பதற்காக வயதுக்கு வராத ஒரு பெண்ணை, பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். என்னை பற்றிய உண்மைகள் அந்த பெண்ணுக்கும் தெரியும். அதனால் இந்த குழந் தையை தத்தெடுத்தோம். குழந்தை மனந்தளர்ந்து போய்விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இவளை தத்துக்குழந்தை என்று வெளியே சொல்வதில்லை. என் முதல் மனைவி நான்கு ஆண்டு களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துபோய் விட்டாள். குழந்தையை வளர்க்கமுடி யாமல் நான் தவித்துக்கொண்டிருக் கிறேன்.

உன்னை திருமணம் செய்து கொள்ளும்படி உன் பெற்றோர் என்னிடம் கேட்டபோது, நான் எல்லா உண்மைகளையும் சொன்னேன். ஆனாலும் அவர்கள், உன்னை எனக்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள். தத்துக் குழந்தைக் காகத்தான் நான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். உனக்கு என் வீட்டில் எல்லா சுதந்திரமும் இருக்கும். இங்கு உன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்று நீதான் முடிவு செய்துகொள்ளவேண்டும்’ என்று கண்கலங்கி, தன் இயலாமையை வெளிப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். அவள் அதிர்ச்சி யில் உறைந்தாள்.

‘தனக்கு விதிக்கப்பட்டது இதுதான்’ என்று அவள் தலை விதியை நொந்துகொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், முன்னாள் கல்லூரி காதலன் ஏதோ ஒரு தோழி மூலம் இவள் வாழ்க்கையில் நடந்த சோகங்களை எல்லாம் அறிந்திருக்கிறான். அவனுக்கு இன்னும் திருமணமா கவில்லை. ‘என்னால்தானே உன் வாழ்க்கையில் இத்தனை சோகம்.. அவமானம்..! காலம் முழுக்க நீ பொம்மைபோல் வாழ வேண்டாம். நாம் உண்மையான வாழ்க்கை வாழலாம். என்னோடு வந்துவிடு..’ என்று இரண்டு பேருக்கும் பொதுவான தோழி மூலம் தூது விட்டிருக்கிறான். அவள் இரு தலைக்கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருக்கிறாள்!

இது காலம் செய்த கோலமா? கல்லூரி காதல் செய்த கோலமா?

- உஷாரு வரும். 

Next Story