லாரிகள் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடிப்பு: மாவட்டத்தில் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு


லாரிகள் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடிப்பு: மாவட்டத்தில் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடிப்பதால் சேலம் மாவட்டத்தில் சுமார் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. நேற்று 3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால் சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும் அரிசி, பருப்பு, இரும்பு தளவாட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக லாரி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான டிரைவர்கள், கிளீனர்கள் தற்போது வேலையிழந்து உள்ளனர்.

அதேசமயம், வெளி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு வர வேண்டிய காய்கறிகள் குறைந்த அளவில் கொண்டுவரப்பட்டன. இதனால் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை வழக்கத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மணல் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், கற்கள், சிமெண்டு போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை. இதன்காரணமாக கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. அதாவது, ஒரு லாரிக்கு 100 முதல் 150 லிட்டர் வரை டீசல் நிரப்பப்படும். தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் வரவில்லை. இதனால் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:–

லாரிகள் வேலை நிறுத்தம் 3–வது நாளாக நீடிக்கிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கும் சரக்குகள் கொண்டுவரமுடியாத சூழ்நிலை உள்ளது. குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை குறைந்துவிட்டது.

அதாவது, ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது 2 ஆயிரம் லிட்டர் டீசல் தான் விற்பனையாகிறது. இதனால் தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு செலுத்தக்கூடிய விற்பனை வரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக எதிர்பார்க்கிறோம். அவ்வாறு ஏற்பட்டால் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துக்கூறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story