திருவள்ளூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு காப்பீட்டு தொகை கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு காப்பீட்டு தொகை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தே பெய்து வருகிறது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு பயிர் செய்து அதிக லாபம் ஈட்டி பயன்பெற வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ளதால் சிறுதானியங்களுக்கு அதிக தேவை இருப்பதால் வேளாண் அதிகாரிகள் மூலம் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு சிறுதானிய பயிர்களை பயிர் செய்து பயன் பெறலாம். உரம் மற்றும் பூச்சி மருந்து வாங்கும் போது ரசீதுகள் வழங்காத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதம் ரூ.18 லட்சம் நிலுவை உள்ளது. விடுபட்ட விவசாயிகளை கண்டறிந்து அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நடப்பாண்டில் (2018-19) திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளை சீரமைக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டுப்பண்ணைய திட்டம் மாவட்டத்தில் நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு மாநிலத்திலேயே முன்னோடி மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ்கிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைய வேண்டும். நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தற்போது கோடை உழவு மேற்கொள்ளப்பட்டு தகுதியுடைய விவசாயிகளுக்கு கோடை உழவுக்கான மானியம், விதைகள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளுடைய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது திரளான விவசாயிகள் பிரதமமந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பஞ்செட்டி கிராமத்தில் காப்பீடு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பு தொகை வழங்கவும், நீர் ஆதாரங்களான ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவேண்டும், தடுப்பணைகள் கட்டவேண்டும், வரத்து கால்வாய், ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முத்துதுரை, மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) எபினேசன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா, ஆர்.டி.ஓ.க்கள் பவனந்தி, முத்துசாமி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story