வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல்


வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரில் இருந்த துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வேலூர்,

வேலூர் அண்ணா சாலை பழைய மீன் மார்க்கெட் அருகே சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று காலை 8.30 மணிக்கு ஞாயிறு தின ஆராதனை தொடங்கி, 10.30 மணிக்கு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தேவாலயத்தில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேவாலய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் வருகிற தேர்தலில் போட்டியிட உள்ள உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கடந்தாண்டு வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது காட்பாடி காந்தி நகரை சேர்ந்த தேவா என்பவருக்கும், வேலூரை சேர்ந்த இஸ்ரவேல் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்த இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த தேவா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இஸ்ரவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க முயன்றுள்ளனர். அதைத்தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மோதிக்கொண்டனர். இதைக்கண்ட சபை உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினர் மோதலை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இருதரப்பை சேர்ந்த சுமார் 15 பேரை விசாரணைக்காக போலீசார் வேனில் ஏற்றி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் தேவாலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேவாவின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கைதுப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து தேவாலயத்தில் இருந்து அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். பின்னர் தேவாலயத்தின் கதவு களை இழுத்து மூடி பூட்டு போட்டனர். அத்துடன் தேவாலயத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தேவாலயத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர், மோதல் தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தேவா, அவரது ஆதரவாளர்கள் மற்றும் இஸ்ரவேல், அவரது ஆதரவாளர்கள் என 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். அதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதல் சம்பவம் வேலூரில் நேற்று பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

Next Story