பெங்களூரு அருகே கார்-தனியார் பஸ் மோதி தீப்பிடித்தது; 2 பேர் உடல் கருகி சாவு 20 பயணிகள் உயிர் தப்பினார்கள்
பெங்களூரு அருகே காரும், தனியார் பஸ்சும் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில், 2 பேர் உடல் கருகி பலியானார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு அருகே காரும், தனியார் பஸ்சும் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில், 2 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் மோதியது
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சந்தாபுரா அருகே ஓசூர் மெயின் ரோட்டில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு தனியார் பஸ் பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த இரும்பால் ஆன தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு சாலையின் மறுப்பகுதிக்கு சென்றது.
மேலும் அந்த சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் மீதும் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பஸ்சின் அடிப்பகுதிக்குள் சென்றது. இதனால் காரில் இருந்த 2 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அதே நேரத்தில் பஸ்சில் இருந்த பயணிகளை டிரைவர் கண்ணன் உடனடியாக கீழே இறங்கும்படி கூறினார். இதனால் பயணிகள் அவசர, அவசரமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள்.
2 பேர் கருகி சாவு
இந்த நிலையில், திடீரென்று காரில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் தனியார் பஸ்சின் முன்பகுதிக்கும் தீ பரவியது. இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகள் கீழே குதித்தார்கள். இதனால் பஸ் டிரைவர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதே நேரத்தில் நடு ரோட்டில் பஸ்சும், காரும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைவீரர்களுடன் சூர்யாநகர் போலீசார் விரைந்து வந்தார்கள். பின்னர் பஸ், காரில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பஸ், காரில் பிடித்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தார்கள். ஆனால் 2 வாகனங்களும் எரிந்து முற்றிலும் நாசமானது. மேலும் காரில் 2 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
அதிவேகமாக ஓட்டியதே...
பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். ஆனால் 2 பேரும் உடல்கள் கருகி விட்டதால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை. காரின் பதிவு எண் மூலமாக அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது.
அந்த தனியார் பஸ் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வந்ததும், வரும் வழியில் விபத்தில் சிக்கியதும், பஸ்சில் தீப்பிடித்ததும் டிரைவர் சுதாரித்து கொண்டு பயணிகளை கீழே இறக்கி விட்டதால், அவர்கள் அனைவரும் உயிர் தப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story