அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 July 2018 5:00 AM IST (Updated: 23 July 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் திட்டியதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.

செய்யாறு,

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது மைதானத்தில் உள்ள மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர், செய்யாறு தாலுகா மாளிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரது மகன் மதன்குமார் (வயது 17) என்பதும், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதன்குமார் புதிதாக செல்போன் வாங்கியதாகவும், படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், இதனால் பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறாயே என திட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மதன்குமார் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டிற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர், புதிதாக வாங்கிய செல்போனை விற்றுவிட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர் தான்படித்த பள்ளியின் விளையாட்டு மைதானத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story