பெங்களூருவில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியது: லாரி சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி கல்லூரி மாணவி சாவு
பெங்களூருவில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தவறி விழுந்த கல்லூரி மாணவி மீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தவறி விழுந்த கல்லூரி மாணவி மீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் கண்களை அவருடைய பெற்றோர் தானம் செய்தனர்.
கல்லூரி மாணவி சாவுபெங்களூரு காட்டன்பேட்டையை சேர்ந்தவர் ராமசந்திரா. இவருக்கு லாவண்யா(வயது 24) மற்றும் பிரீத்தி (19) என்ற மகள்கள் இருந்தனர். பிரீத்தி, தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் லாவண்யாவும், பிரீத்தியும் லால்பாக்கில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக காலையில் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்கள். ஸ்கூட்டரை லாவண்யா ஓட்டிச் சென்றார்.
லால்பாக் மேற்கு நுழைவு வாயில் அருகே உள்ள கும்பிகல் ரோட்டில் வரும்போது, அதே சாலையில் பின்னால் வந்த கான்கிரீட் கலவை செய்யும் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து லாவண்யாவும், பிரீத்தியும் தூக்கி வீசப்பட்டனர். இந்த நிலையில், பிரீத்தியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். லாவண்யா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்
. கண்கள் தானம்இதுபற்றி அறிந்ததும் வி.வி.புரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து லாவண்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விபத்தில் பலியான மகள் ப்ரீத்தியின் உடலை பார்த்து ராமசந்திரா, அவரது மனைவி கதறி அழுதார்கள். அதே நேரத்தில் தங்களது மகளின் 2 கண்களையும் தனியார் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள்.
இதுகுறித்து வி.வி.புரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.