‘‘திராவிட கட்சிகளால் மதுக்கடைகளை மூட முடியாது’’ மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி


‘‘திராவிட கட்சிகளால் மதுக்கடைகளை மூட முடியாது’’ மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
x
தினத்தந்தி 23 July 2018 5:15 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

திராவிட கட்சிகளால் மதுக்கடைகளை மூட முடியாது. அது பா.ஜ.க.வினால் மட்டுமே சாத்தியம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் ‘தமிழ் மகள் தாமரை மாநாடு’ நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவி விஜய்ஸ்ரீரத்னாகர் தலைமை தாங்கினார். மாநில பா.ஜ.க. தலைவி தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:–

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு கொடுத்துள்ள திட்டங்களை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். நம் நாடு பெண்ணை, நதியை, மண்ணை தாயாக பார்க்கிறது. மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, ஏராளமான மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தது தான் காரணம். தற்போது இந்த நிலை மாறியுள்ளது. பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் பா.ஜ.க. அரசால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் மூலம் 70 சதவீதம் கடனுதவி பெண்களுக்கே தரப்பட்டுள்ளது.

பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் 13 ஆயிரம் திறன் வளர்ப்பு மையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களின் மேம்பாட்டுக்கு பா.ஜ.க. அரசு கடுமையாக உழைத்து வருகிறது. நாடு முழுவதும் எரிவாயு இணைப்பு கேட்டு 8 கோடி மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அதன்மூலம் 4 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.

திராவிட கட்சிகளால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட முடியாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும். முந்தைய ஆட்சியில் பெண்களுக்கான நலனில் அக்கறை காட்டப்படவில்லை. ஆனால் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 2020–ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு கிடைக்க பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன், புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story