டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இளையான்குடி பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி,
இளையான்குடி புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் அந்த டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மனிதநேய ஜனநாயக கட்சி, த.மு.மு.க. கட்சியினர் டாஸ்மாக் கடை திறப்பதால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கடையை மூடும்படி வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இந்தநிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நேற்று மீண்டும் திறக்க முயற்சி நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் இளையான்குடி தாசில்தார் கண்ணதாசன், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.