திருவாடானை தாலுகாவில் ரே‌ஷன்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட பா.ஜனதா வலியுறுத்தல்


திருவாடானை தாலுகாவில் ரே‌ஷன்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 July 2018 3:30 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் ரே‌ஷன்கடைகளுக்கு சொந்தகட்டிடம் கட்ட பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் 108 முழுநேர ரே‌ஷன்கடைகளும், 33 பகுதி நேர ரே‌ஷன்கடைகள் உள்ளன. ஆனால் இதில் திருப்பாலைக்குடி காந்திநகர், பழங்கோட்டை கடை எண்–2, செங்கமடை, கலிய நகரி, நெடுமரம், சோழகன்பேட்டை, திணையத்தூர், கீழசேந்தனேந்தல், மோர்ப்பண்ணை மகளிர் கடை, கீழ்பனையூர், திருவாடானை சமத்துவபுரம் மகளிர் கடை, செவ்வாய்பேட்டை உள்பட 10–க்கும் மேற்பட்ட ரே‌ஷன்கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று வாங்கிச்செல்ல போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த கடைகளில் ரே‌ஷன் பொருட்கள் பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

இதனால் இன்னும் வாடகை கட்டிடங்களில் தான் இக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் திருவாடானை தாலுகாவில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ரே‌ஷன்கடைகளுக்கு உரிய நிதிகளை ஒதுக்கி சொந்த கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் திருவாடானை ஒன்றிய பா.ஜ.க. பொருளாளர் கோபிநாத் கதிரேசன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.


Next Story