ஊட்டி அருகே முத்தநாடுமந்தில் மொழியியல் பயிற்சியில் ஈடுபட்ட மலேசிய பல்கலைக்கழக மாணவிகள்
ஊட்டி அருகே முத்தநாடுமந்தில் மொழியியல் பயிற்சியில் ஈடுபட்ட மலேசிய பல்கலைக்கழக மாணவிகள் தோடர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொண்டனர்.
ஊட்டி,
மலேசியா நாட்டில் உள்ள மலாயா பல்கலைக்கழக மொழியியல் துறை முதலாம் ஆண்டு, 2–ம் ஆண்டு மாணவிகள் 13 பேர் மொழியியல் பயிற்சி வகுப்புக்காக கடந்த 4–ந் தேதி கோவை வந்தனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை சார்பில், தமிழ் மொழியியல் குறித்த பயிற்சி கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கடந்த 5–ந் தேதி பயிற்சி தொடங்கி மொத்தம் 27 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சிக்கு வந்து இருப்பவர்கள் தமிழ் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மந்து என்று அழைக்கப்படும் கிராமங்களில் வாழ்ந்து வரும் தோடர் இன மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பரியம் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஊட்டி அருகே உள்ள முத்தநாடுமந்துக்கு நேற்று கல்லூரி மாணவிகள் வந்தனர். தோடர் இன இளைஞர் ஒருவர் அவர்களுக்கு அங்குள்ள பாரம்பரியம் குறித்து கூறியதாவது:–
தோடர் இன மக்கள் ஆண்டுதோறும் ‘மொர்பர்த்’ என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி விரதம் இருந்து மூன்போ என்ற கோவிலில் வழிபடுவோம். இதில் ஆண்கள் மட்டுமே கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். தோடர் இன மக்களின் தலைமையிடமான முத்தநாடு மந்தில் தான் மூன்போ என்ற கோவில் உள்ளது. மற்ற மந்துகளில் அடையாள்வோ என்ற கோவில் இருக்கும்.
முத்தநாடுமந்தில் இரு கோவில்களும் உள்ளன. நாங்கள் எருமை மாடுகளை புனிதமாக கருதுகிறோம். தோடர் இன மக்களின் கோவில் எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு எருமை மாடுகள், வீடுகளுக்கு தேவையான பால் கறக்க என தனியாக எருமை மாடுகள் உள்ளன. அதனை நாங்கள் எளிதில் அடையாளம் கண்டு விடுவோம். எருமை மாடுகளுக்கு என்று உப்பிடும் (உப்பர்த்தி) பண்டிகை கொண்டாடுகிறோம். பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி மகிழ்வோம். வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.
இதனை கேட்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதில் பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறைத்தலைவர் சுப்பிரமணியன், உதவி பேராசிரியர் ரமேஷ் கலந்துகொண்டனர். இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறைத்தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:–
பழங்குடியின மக்களின் மொழிகள் குறித்த ஆராய்ச்சி மேம்பாடு செயல்திட்டத்துக்கு பல்கலைக்கழக மானியக்குழு ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அழிவின் பிடியில் உள்ள பழங்குடியின மக்களின் மொழிகளை அடையாளம் கண்டு, அதனை தேர்வு செய்து பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள், கலாசாரங்கள், மருத்துவ முறைகள், மொழியின் தனிச்சிறப்புகள் போன்றவை குறித்த தகவல்களை சேகரித்து புகைப்படம் மற்றும் ஆவணங்களாக்கி வருகிறோம். இதன் மூலம் பயிற்சி பெறும் மலேசியா கல்லூரி மாணவிகள் தங்களது செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோடர்களின் மொழி, வளர்ப்பு எருமைகள் அழிந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தோடர் இன மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.