பல்லடத்தில் முத்திரைத்தாள் விற்பனை கடையில் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு
பல்லடத்தில் முத்திரைத்தாள் விற்பனை கடையில் மேற்கூரையை பிரித்து ரூ.58 ஆயிரத்தை திருடிச்சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் தேடிவருகிறார்கள்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலவேணி (வயது 29). இவர் பல்லடம் நால்ரோட்டில் முத்திரைத்தாள் விற்பனை கடை வைத்து நடத்திவருகிறார். தினமும் காலை 9 மணிக்கு தனது தந்தை சுந்தரத்துடன் (69) கடைக்கு செல்லும் அவர் அதன் பின்னர் இரவு 9.30 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் கடைக்கு சென்று பணிகளை பார்த்து விட்டு இரவு கடையை பூட்டி விட்டு தந்தையும், மகளும் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் இருவரும் கடைக்கு வந்தனர். கடையை திறந்த போது உள்ளே அதிகளவில் வெளிச்சம் இருந்தது. அத்துடன் பொருட்கள் சிதறி கிடந்தன.
அப்போது கடையின் மேற்கூரையான சிமெண்டு சீட்டு கழற்றி எடுக்கப்பட்டதுடன், அதன் கீழ் இருந்த தெர்மாகோல் சீட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அத்துடன் கடைக்குள் மேஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 ஆயிரம் மற்றும் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவும் சுவற்றை பார்த்து திருப்பிவைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் இது குறித்து உடனடியாக பல்லடம்போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் இரவு 11.25 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவன் கடையின் மேற்கூரை சிமெண்டு சீட்டை கழற்றி எடுத்துவிட்டு, தெர்மாகோல் சீட்டுகளை உடைத்து உள்ளே இறங்கிய காட்சி இருந்தது. அவர் முகத்தை துண்டால் சுற்றி கட்டியிருந்தார். பின்னர் செல்போனில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் கடையில் பணத்தை திருடியதுடன் கண்காணிப்பு கேமராவை சுவற்றை பார்த்து திருப்பிவைத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்திரைத்தாள் கடையில் பணத்தை திருடிச்சென்ற முகமூடி ஆசாமியை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.