வரத்து குறைந்தாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை தொட்டது
நீர்வரத்து குறைந்தாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை தொட்டது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 120 அடியாகும். இதில் 15 அடி சேறும், சகதியும் போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பில்லூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 692 கன அடி நீர் வந்துகொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 94.51 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 6 ஆயிரத்து 556 கனஅடி வந்துகொண்டு இருந்தது. மாலை 5 மணி அளவில் வரத்து குறைந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கன அடிநீர் வந்துகொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 95 அடியை தொட்டது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 2008–ம் ஆண்டு பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியாக உயர்ந்து உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சீராக வந்தால் விரைவில் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.