அ.தி.மு.க.வில் பொறுப்பு கொடுத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - நடிகை லதா பேட்டி
அ.தி.மு.க.வில் பொறுப்பு கொடுத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று ஈரோட்டில் நடிகை லதா கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கவிதாலயம் சார்பில் பழம்பெரும் நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை லதா கூறியதாவது:–
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தேன். 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 200 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். தற்போது பல்வேறு டி.வி. சீரியல்களில் நடித்து வருகிறேன்.
நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். போக, போக அவர்களின் செயல்பாட்டை வைத்து தான் அவர்களை ஏற்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.
இரட்டை இலை சின்னம் உள்ள அ.தி.மு.க.வில் நான் நீடிக்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் எனக்கு அ.தி.மு.க.வில் பதவி வழங்குவதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூறி உள்ளனர். அப்படி வழங்கினால் நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்தில் மிகுந்த நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டார். அப்போது ஈரோடு, தேனி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் நாட்டிய நாடகம் நடந்தது. இதில் நான் கலந்து கொண்டு நாட்டியம் ஆடினேன்.
இதன் மூலம் ரூ.35 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை கொண்டு தான் அ.தி.மு.க. கடந்த 1977–ம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் அ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கும் உள்ளது. இதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை லதா கூறினார்.