இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் காவிரி நீர்: ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட தயாராகி வரும் திருச்சி மக்கள்


இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் காவிரி நீர்: ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட தயாராகி வரும் திருச்சி மக்கள்
x
தினத்தந்தி 22 July 2018 11:00 PM GMT (Updated: 22 July 2018 7:38 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருகரைகளையும் தொட்டபடி காவிரி நீர் செல்வதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாட திருச்சி மக்கள் தயாராகி வருகிறார்கள்.

திருச்சி,

முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு காவிரி நீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அங்கு ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டு இருந்த நீருடன் பெருக்கெடுத்து ஓடி வந்த காவிரி நீர் நள்ளிரவு அம்மா மண்டபம் படித்துறை வழியாக கல்லணையை சென்றடைந்தது. நேற்று காலை கல்லணையில் இருந்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்குவதற்கு வசதியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வருகிற 3- ந்தேதி ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்த நிலையிலேயே நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள சூழ்நிலையில் இப்போதே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் திருச்சி மாவட்ட மற்றும் மாநகர மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

நேற்று இரவு நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடி ஆக இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தொடர்ந்து உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று (திங்கட்கிழமை) இரவிற்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று இரவு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 2013-ம் ஆண்டு மேட்டூர் அணை ஆகஸ்டு மாதம் தான் 100 அடியை தாண்டியது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதமே 120 அடியை எட்டுகிறது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை நிரம்புவது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story