நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தேவேகவுடா திட்டம்


நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தேவேகவுடா திட்டம்
x
தினத்தந்தி 23 July 2018 4:00 AM IST (Updated: 23 July 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தேவேகவுடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தேவேகவுடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 தொகுதியில் மட்டுமே...

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தாமாக முன்வந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.

ஜனதா தளம்(எஸ்) தலைமையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் காங்கிரசும் பங்கு கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை இதே கூட்டணியுடன் எதிர்கொள்வது என்று ஏற்கனவே இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை பொறுத்தவரையில் அந்த கட்சி மண்டியா, ராமநகர், ஹாசன், துமகூரு, சிக்பள்ளாப்பூர், கோலார் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மட்டுமே பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இது சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வட கர்நாடகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தென்மாவட்டங்களில் தான்...

இந்த தென்மாவட்டங்களில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. அந்த பகுதிகளில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு பெரிதாக இல்லை. கர்நாடகத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு ஜனதா தளம்(எஸ்) கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிட்டு ஹாசன் மற்றும் மண்டியா ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அவ்வளவு தொகுதிகளை விட்டுத்தர காங்கிரசுக்கு மனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தாலும், அந்த தொகுதிகளை தென்மாவட்டங்களில் தான் ஒதுக்க வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) வற்புறுத்துகிறது.

பெரிய சிக்கல் உள்ளது

அவ்வாறு தென்மாவட்டங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கினால், அக்கட்சி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் மற்ற தொகுதிகளில் காங்கிரசின் வெற்றியை எளிதாக்கும் வகையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வாக்கு வங்கி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், துமகூரு, கோலார் போன்ற ஜனதா தளம்(எஸ்) செல்வாக்கு உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எம்.பி.யாக உள்ளனர். அந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தொகுதிகளில் மீது தான் ஜனதா தளம்(எஸ்) கண் வைத்துள்ளது. இதனால் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் இரு கட்சிகளுக்கும் பெரிய சிக்கல் உள்ளது.

தேவேகவுடா ஆலோசனை

அதனால் 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளதால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story