மத்திய, மாநில அரசுகளின் இணக்கத்தை கவர்னர் சீர்குலைத்துவிட்டார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு


மத்திய, மாநில அரசுகளின் இணக்கத்தை கவர்னர் சீர்குலைத்துவிட்டார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான இணக்கத்தை கவர்னர் கிரண்பெடி சீர்குலைத்துவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

1946 முதல் 1962 வரை புதுச்சேரி மாநில பிரதிநிதித்துவ சட்டத்தின்படியே பிரெஞ்சு மற்றும் இந்திய அரசு புதுச்சேரியை ஒரு மாநிலமாக கருதியது. பிறகு 1962–ம் ஆண்டு 14–வது இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் புதுச்சேரி மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் அடைந்தது. 1971–ம் ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில 8–வது மாநாட்டில் மக்கள் தலைவர் வ.சுப்பையா புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

1978–ம் ஆண்டு புதுச்சேரியின் இறையாண்மைக்கு கடும் சோதனை ஏற்பட்டது. 4 பிராந்தியங்களையும் தனித்தனியே பிரித்து அவற்றை அருகேயுள்ள மாநிலங்களுடன் இணைத்துவிட மத்திய அரசு முயற்சி செய்தது. இதனை எதிர்த்து நடந்த இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்ப்பலி உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை சந்தித்து இணைப்பை தடுத்து நிறுத்தினோம்.

1991–ம் ஆண்டு இந்தியா உலக பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்க தொடங்கிய காரணத்தினால் ஏற்பட்ட நிதிச்சுமையை புதுச்சேரியின் மீது சுமத்த தொடங்கியது. புதுவை பட்ஜெட்டிற்கு 90 சதவீதம் மானியம் கொடுத்துவந்த மத்திய அரசு அதனை 30 சதவீதமாக குறைத்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அடிமையுணர்வு மற்றும் ஏமாற்றத்தால் இப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலுவாக வைக்க முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.

புதுவை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் தற்போது கவர்னர் கிரண்பெடி மூலமாக பாரதீய ஜனதா ஆட்சி நடத்த நினைக்கிறது. கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று சொல்லிக்கொண்டு அவர் போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை துச்சமென மதித்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

ஜனநாயகத்துக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைத்து மத்திய, மாநில அரசுகளின் இணைக்கத்தை சீர்குலைத்துவிட்டார். இதனால் புதுச்சேரி மாநிலம் நிர்வாக ரீதியாக முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சிறப்பு மாநில அந்தஸ்து என்று குழப்பிக்கொண்டிருந்த முதல்–அமைச்சர் நாராயணசாமி இப்போது முழு மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வந்துவிட்டார்.

புதுச்சேரிக்கு முழுமாநில அந்தஸ்து கோரிக்கை பலம்பெற்று வருகிறது. இக்கோரிக்கை சம்பந்தமாக அனைத்து விவரங்களும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா மற்றும் பினாய் விஸ்வம் ஆகியோருக்கு விரிவாக கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை வென்றிட புதுச்சேரி மக்கள் அனைவரும் எந்தவித கருத்து வித்தியாசமின்றி ஒன்றுபட்டு போராட்ட உணர்வோடு அணிதிரளுமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சலீம் கூறியுள்ளார்.


Next Story