திருபுவனை அருகே தனியார் தொழிற்சாலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு


திருபுவனை அருகே தனியார் தொழிற்சாலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2018 5:00 AM IST (Updated: 23 July 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே தனியார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி, அங்கிருந்த குளங்களை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருபுவனை,

கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும்போது வார இறுதிநாட்களில் கிராமப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் தடுப்பணை, ஏரி, குளங்களை தூர்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை திருபுவனை அருகே சன்னியாசிகுப்பத்தில் உள்ள குளிர்சாதன பெட்டி தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். இதற்காக அதிகாரிகளுடன் கவர்னர் மாளிகையில் இருந்து புதுச்சேரி அரசு சாலைபோக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் இருந்த 5 குளங்களை அவர் பார்த்தார். இந்த குளங்களை முறையாக தூர்வாரி, மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சூரிய மின்சக்தி தகடு அமைத்து, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது புதுச்சேரி கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன் மற்றும் நீர்பாசனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுவை கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் அதிகாரிகள் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஆய்வுக்காக அரசின் சாலை போக்குவரத்து கழக பஸ்சில் சென்றார். அங்கு ஆய்வை முடித்துக்கொண்டு புதுச்சேரி திரும்புவதற்காக கவர்னர் மற்றும் அதிகாரிகள் பஸ்சில் ஏறினர். ஆனால் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் பஸ்சில் ஏற்பட்ட பழுது சரியாகவில்லை. இதையடுத்து தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ்சில் கவர்னர் மற்றும் அதிகாரிகள் புதுவைக்கு திரும்பினர்.


Next Story