புதுவைக்கு மாநில அந்தஸ்து: ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


புதுவைக்கு மாநில அந்தஸ்து: ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 July 2018 4:45 AM IST (Updated: 23 July 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற நிலையை அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

புதுவையில் ஆளும் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து வரும் சூழ்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற தனிநபர் தீர்மானங்களின் உண்மை நிலையை மூடி மறைத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதாவது புதுவை மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்கிற அக்கறையில் தி.மு.க. செயல்படுவதுபோல காண்பிக்கிறார்.

1998–ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இருந்தபோது தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் வாதாடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்து உரைத்தார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் கொள்கை முடிவினை எடுக்கவும் ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார். இதற்கிடையே மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த தி.மு.க. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை ஒரு தடவை கூட வலியுறுத்தியது கிடையாது. புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியது கிடையாது.

புதுவை சட்டசபையில் 12–க்கும் அதிகமான முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கிற தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் பெரும்பாலும் காங்கிரசும், தி.மு.க.வும் தான் இருந்தன. அவர்கள் நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை எப்போதோ வழங்கி இருக்கலாம்.

புதுச்சேரியில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தனி நபர் தீர்மானத்தை அ.தி.மு.க.தான் முதலில் கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க.வால் கொண்டுவரப்பட்ட தனி நபர் தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாநில அந்தஸ்து உடனே வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது ஒரு நாடகம் ஆகும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள். ஸ்டாலின் பொய்யான தகவலை அளிக்கிறார். இதனை புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story