திருச்சியில் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் வாழைக்காய்கள் ரெயில் மூலம் அனுப்பப்பட்டன


திருச்சியில் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் வாழைக்காய்கள் ரெயில் மூலம் அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. வாழைக்காய்கள் ரெயில் மூலம் அனுப்பப்பட்டன.

திருச்சி,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. திருச்சி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயக்கப்படவில்லை.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் 3-வது நாளாக நீடித்தது. இதனால் திருச்சியில் இருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய் மற்றும் தானியங்கள் லாரிகளில் எடுத்துச்செல்லப்படவில்லை. லாரி போக்குவரத்தினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி கீழப்புலிவார்டு சாலை போக்குவரத்து நெருக்கடி இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. லாரி புக்கிங் அலுவலகங்கள், மற்றும் ஏஜெண்டு அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தன. காந்திமார்க்கெட்டிற்கு மினிலாரி மற்றும் வேன்கள் மூலம் காய்கறிகள் வந்தன.

திருச்சி வாழைக்காய் மண்டியில் இருந்து தினமும் கேரளாவுக்கு வாழைக்காய்கள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். வேலை நிறுத்த போராட்டத்தினால் அவற்றை லாரிகளில் அனுப்ப முடியவில்லை. இதனால் அங்கு வாழைக்காய்கள் தேங்கின. சில மொத்த வியாபாரிகள் ரெயில் மூலம் வாழைக்காய்களை கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். 

Next Story