நாகர்கோவிலில் தாத்தா வீட்டில் ரூ.27 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடியவர் கைது


நாகர்கோவிலில் தாத்தா வீட்டில் ரூ.27 ஆயிரத்தை திருடிவிட்டு நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 23 July 2018 3:45 AM IST (Updated: 23 July 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தாத்தா வீட்டில் ரூ.27 ஆயிரத்தை திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மேல பெருவிளையை சேர்ந்தவர் அகஸ்டின். இவருடைய பேரன் அந்தோணி (வயது 36), ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அகஸ்டினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அந்தோணியை வரவழைத்து அவரது ஆட்டோவில் அகஸ்டினை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து சிகிச்சை முடிந்து நேற்று காலை அகஸ்டின் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் அகஸ்டின் வீட்டில் பெட்டிக்குள் வைத்திருந்த ரூ.27 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை.

இதுபற்றி தன் பேரனிடம் அகஸ்டின் கூறினார். அவரும் வீட்டுக்கு வந்து பணத்தை தேடி இருக்கிறார். பின்னர், ‘யாரேனும் திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பார்கள்‘ என்று தாத்தாவிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். திருடர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து இருந்தால் வீட்டு கதவின் பூட்டை உடைத்திருப்பார்கள். பணம் இருக்கும் இடத்தை தேடியதற்கான அடையாளங்கள் இருந்திருக்கும். ஆனால் அவரது வீட்டில் திருடர்கள் புகுந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே இதுதொடர்பாக அகஸ்டின் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் அந்தோணி மீது போலீசாரின் பார்வை திரும்பியது. இதனையடுத்து அந்தோணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தோணி மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தாத்தா அகஸ்டின் வீட்டில் வைத்திருந்த ரூ.27 ஆயிரத்தை திருடியது அந்தோணி தான் என்பதும், அவரே கொள்ளை போனதாக நாடகமாடியதும் தெரியவந்தது.

அகஸ்டின் தனது பணத்தை வீட்டின் ஜன்னல் அருகே ஒரு பெட்டியில் வைத்துள்ளார். பெட்டியில் பணம் இருக்கும் விஷயம் அந்தோணிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் அனைவரும் இரவில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாத்தா வீடு என்றும் கூட பாராமல் ஜன்னல் வழியாக பணத்தை அந்தோணி திருடி இருக்கிறார்.

பின்னர் அந்த பணத்தை பதுக்கிவைத்துவிட்டு, வேறு யாரோ கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி இருக்கிறார். ஆனால் போலீசாரின் விசாரணையில் ‘குட்டு‘ அம்பலமாகிவிட்டது. அதைத்தொடர்ந்து அந்தோணியை போலீசார் கைது செய்தனர். 

Next Story