பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயற்சி 4 பேர் கைது


பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயற்சி 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2018 4:00 AM IST (Updated: 23 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில், பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ய வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

நவிமும்பையில், பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ய வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

நவிமும்பை கோபர்கைர்னே ரெயில் நிலையம் அருகே பச்சிளம் குழந்தையை விற்பனை செய்வதற்காக சிலர் வருவதாக மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் கோபர்கைர்னே ரெயில் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு பச்சிளம் ஆண் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் தான் குழந்தையை விற்பனை செய்ய வந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் அதிரடியாக ைகது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து...

விசாரணையில் அவர்கள் தானே மும்ராவை சேர்ந்த மஜித் அப்துல் சேக் (வயது27), ராயிஸ் காஷி (26), அம்பிவிலியை சேர்ந்த நகினா யூசுப் சேக் (27), மாஞ்சுஜா (23) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அது பிறந்து 15 நாளே ஆன குழந்தை என்று தெரியவந்தது. அந்த குழந்தையை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்ததாகவும், ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அந்த குழந்தையை பராமரிப்புக்காக நெருலில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கைதான 4 பேரும் குழந்தையை கடத்தி கொண்டு வந்தனரா? அல்லது குழந்தையின் பெற்றோரிடம் இருந்து வாங்கி கொண்டு வந்தார்களா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் பெங்களூரு விரைந்து உள்ளனர்.

Next Story